உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் 2-வது நாளாக போலீசார் சோதனை

Published On 2023-01-22 09:25 GMT   |   Update On 2023-01-22 10:24 GMT
  • மார்க்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் ஏராளமானோரை கண்டுபிடித்து அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.
  • சோதனையின் போது மார்க்கெட் பகுதியில் கஞ்சா புகைத்து கொண்டு இருந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் அடிக்கடி மோட்டார்சைக்கிள் திருட்டு, செல்போன் மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

மேலும் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளையும் தாக்கி வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இதேபோல் மார்க்கெட் வளாகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கூட்டுறவு ஊழியரிடம் 'லிப்ட்' கேட்டு ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென அவரது 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு மார்க்கெட் வளாகத்திற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டான்.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மார்க்கெட் வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பைக் திருட்டு, லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 7 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலையும் போலீசார் மார்க்கெட் வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளின் மொட்டை மாடி, கழிப்பறை மாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏறி ஆய்வு செய்து தீவிர சோதனை நடத்தினர்.

இன்று அதிகாலை 2-வது நாளாக போலீசாரின் அதிரடி சோதனை நீடித்தது. மார்க்கெட்டில் உள்ள கடைகளில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் தவிர்த்து மார்க்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் ஏராளமானோரை கண்டுபிடித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் நடமாட்டம் பற்றி தகவல் தெரிந்தால் வியாபாரிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். தொடர்ந்து இதுபோன்று சோதனை நடத்தப்படும் என்றனர்.

Tags:    

Similar News