ஆவடியில் இருந்து கோயம்பேடுக்கு பஸ்சில் கணவருடன் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
- பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு போலீஸ் என்று கூறி மிரட்டி அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
- தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
திருநின்றவூர்:
ஆவடியில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று இரவு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. ஒரு தம்பதியினர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது அவர்களது பின்பக்கம் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூங்குவது போல நடித்து திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணும், அவரது கணவரும் அந்த நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அடாவடியாக பேசிய அந்த நபர் தான் ஆவடியில் போலீசாக பணிபுரிவதாக கூறி அந்த தம்பதியரை மிரட்டினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர் அந்த நபர் இறங்கி சென்று விட்டார்.
பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு போலீஸ் என்று கூறி மிரட்டி அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் அந்த நபர் பணி செய்யவில்லை. அவர் குறித்து விசாரணை நடத்திவருவதாக ஆவடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.