உள்ளூர் செய்திகள்

இளம்பெண் திருமணத்தை நிறுத்த சதி செய்த வாலிபர்: நிச்சயமான மாப்பிள்ளைக்கு மிரட்டல் விடுத்ததால் வழக்கு

Published On 2023-10-20 14:28 IST   |   Update On 2023-10-20 14:28:00 IST
  • சேதுபதி அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.

கோவை:

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்வதற்காக மணமகன் தேடி ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்தேன். இதனையடுத்து சேதுபதி என்பவர் என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். மேலும் பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாக கூறி போலியாக அடையாள அட்டை தயார் செய்து எனக்கு அனுப்பினார்.

சேதுபதி அடிக்கடி என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார். இதனையடுத்து நான் அவரது செல்போன் எண்ணை முடக்கினேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி என்னை தொடர்பு கொண்ட சேதுபதி நான் திருமணம் செய்ய போகும் வாலிபரின் நடவடிக்கைகள் சரியில்லை. அவர் நல்லவர் இல்லை. எனவே அவரை திருமணம் செய்ய வேண்டாம் என உண்மைக்கு மாறான தகவல்களை என்னிடம் கூறினார்.

மேலும் அவர் நான் திருமணம் செய்ய போகும் வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சேதுபதி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News