உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவர் சந்தோஷ்பாபு உடலை படத்தில் காணலாம்.

தனியார் பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட பிளஸ்-1 மாணவன் திடீர் மரணம்

Published On 2022-11-24 05:24 GMT   |   Update On 2022-11-24 05:24 GMT
  • பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • மாணவனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கரூர்:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த காக்காவடி பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கரூர் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகன் சந்தோஷ் பாபு (வயது 16) என்ற மாணவன் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அவர் விடுதியில் கொடுத்த உணவினை வாங்கி சாப்பிட்டார். பின்னர் சற்று நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதுபற்றி சக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாணவன் சந்தோஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த மாணவனின் தந்தை சரவணன் மற்றும் உறவினர்கள் கரூர் விரைந்தனர். பின்னர் அவர்கள் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

உயிரிழந்த மாணவன் இரவு உணவு சாப்பிட செல்லும்போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, மாணவனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் உண்மை தெரியும் என கூறினர்.

பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News