பெரியபாளையம் அருகே சொத்து தகராறில் இளம்பெண் அடித்துக்கொலை- உறவினர் கைது
- சத்திய வேலுவின் மகன் பவுன்குமார் என்கிற விஷால் இரும்பு கம்பியால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார்.
- சொத்து தகராறில் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வி. இவரது மகன் முருகன். அவரது மனைவி ரம்யா (வயது32).
செல்வியின் கணவர் திராவிடபாலு ஏற்கனவே இறந்து போனார்.திமு.க.வில் ஒன்றிய செயலாளராகவும், கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு அதே பகுதியில வசித்து வருகிறார்கள். இவர் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக தற்போது உள்ளார்.
இந்தநிலையில் திராவிட பாலுவின் குடும்பத்தினருக்கும், சத்தியவேலுவின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதனால் இருகுடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவும் நிலம் தொடர்பாக அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்லாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த சத்திய வேலுவின் மகன் பவுன்குமார் என்கிற விஷால் இரும்பு கம்பியால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் முருகன், மகன் கருணாநிதி மற்றும் செல்வி, ஆகியோரையும் தாக்கி விட்டு விஷால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த தாக்குதலில் ரம்யா உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் தலையில் பலத்த காயம் அடைந்த ரம்யா உயிருக்கு போராடினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காயம்அடைந்த 4 பேரையும மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார்.
படுகாயம்அடைந்த செல்வி, முருகன், கருணாநிதி ஆகிய 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தப்பி ஓடிய விஷாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது .கைதான விஷால் என்ஜினீயரிங் முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து தகராறில் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.