பழவேற்காடு அருகே காய்ச்சலுக்கு 8 மாத குழந்தை பலி
- காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பொன்னேரி:
சென்னையை அடுத்த பழவேற்காடு லைட்அவுஸ் குப்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று காய்ச்சல், வாந்தி-பேதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பழவேற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய மருந்து இல்லை என்று கூறி குழந்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி பழவேற்காடு, பொன்னேரி அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.