போலி மதுபான தொழிற்சாலை நடத்திய ஊராட்சி தலைவியின் கணவர் கைது
- அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள வட மணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி ஜெயந்தி. இவர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
வடிவேலு, கொங்கறை கிராமத்தில் ஒரத்தி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு அரிசி ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் அந்த அரிசி ஆலையில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு மதுபானம் தயாரிக்க வைத்திருந்த 212 கேன்களில் இருந்த எரி சாராயம், 11 ஆயிரம் பாட்டில் மூடிகள், 20 ஆயிரம் காலிபாட்டில்கள், மதுபாட்டில்களை சீல் வைக்கும் எந்திரங்கள் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக ஊராட்சி தலைவியின் கணவர் வடிவேலு, அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இங்கு தயாரிக்கப்பட்ட போலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலும் கள்ளத்தனமாக கொடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அரிசி ஆலையில் சோதனையின் போது மதுபானை தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.