உள்ளூர் செய்திகள்
கைதான வினோத்குமார்.

சேலம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் கைது

Published On 2022-06-23 14:56 IST   |   Update On 2022-06-23 14:56:00 IST
  • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கட்சி பொதுக்குழு கூட்டத்தில், தலைமை பொறுப்பு வழங்கவில்லை என்றால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைப்பேன் என மிரட்டல் விடுத்தார்.
  • சேலம் மாநகர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

சேலம்:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கட்சி பொதுக்குழு கூட்டத்தில், தலைமை பொறுப்பு வழங்கவில்லை என்றால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைப்பேன் என மிரட்டல் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவுக்கும், சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரெயில்நிலையம் கொண்டு வரப்பட்டது.

சேலம் மாநகர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு ரெயில் நிலைய அறைகள் மற்றும் பார்சல்கள், பயணிகள் உடமைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர். தொடர்ந்து சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் விடிய விடிய போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதனிடையே மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை கொண்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் அந்த நபர் தாம்பரத்தில் இருந்து மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை இன்று காலை தாம்பரம் சேலையூர் பகுதியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது பெயர் வினோத்குமார் (வயது 36) என்பதும், அவர் சிதம்பரம், உடையூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், சிதம்பரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

கைதான வினோத்குமார் ஓ.பன்னீர் செல்வம் மீது இருந்த பற்று காரணமாக மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரை ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News