உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

Published On 2023-03-05 09:51 GMT   |   Update On 2023-03-05 09:51 GMT
  • கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.
  • கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சுரேஷ் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சென்னை:

சென்னை கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ராதா, வீட்டில் இருந்த கணவரின் செல்போனை ஆய்வு செய்தார்.

அப்போது அதில் "ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்து இருப்பது தெரிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கே.கே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.

மேலும் தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு அதனை செல்போனில் பதிவு செய்து மாயமாகி இருப்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து மாயமான சுரேஷை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சுரேஷ் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சுரேஷின் உடல் மெரினா கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

சுரேஷின் உடலை கைப்பற்றி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான வினோத் குமார் என்பவர் நேற்று முன்தினம் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News