உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதவியால் ஆம்புலன்சு மூலம் அழைத்து வரப்பட்டு வாக்களித்த மூதாட்டி

Published On 2024-04-20 09:56 GMT   |   Update On 2024-04-20 09:56 GMT
  • வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
  • தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

மதுரை:

தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மதுரையில் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. மதுரையை பொருத்தவரையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் லீலா (வயது 99). இவரது 2 மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர். இவரது மற்றொரு மகள் வீடு தவிட்டுசந்தை பகுதியில் உள்ளது. இவர் அப்பகுதியில் மகளுடன் வசித்து வருகிறார்.

இவருக்கு மதுரைவடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கான வாக்குச்சாவடி கே.கே.நகர் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கும் முதியவர்களுக்கான உரிமைக்கு விண்ணப்பிக்க காலம் கடந்ததாக கூறப்படுகிறது. எனவே நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க விரும்பினார். 99 வயதான இவர் நடக்க முடியாத முதுமையான நிலையில் காணப்பட்டதால் வாக்களிக்க உதவுமாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கோரிக்கை விடுத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்று மூதாட்டி லீலா ஆம்புலன்சில் சென்று வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு தனது உதவியாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதன் பேரில் ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு தவிட்டுசந்தையில் உள்ள அவரது மகள் இல்லத்தில் இருந்து மூதாட்டியை வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு ஆம்புலன்சு மூலம் தன்னார்வலர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 99 வயது மூதாட்டி லீலா தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு அமைச்சர் உதவிய சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News