உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசியில் பரவலான கோடை மழை

Published On 2023-05-02 11:30 IST   |   Update On 2023-05-02 11:30:00 IST
  • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
  • மாநகர பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ந்த காற்றும் வீசியது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மதியம் 3 மணிக்கு பின்னர் திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் பாளை, வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், மேலப்பாளையம், சந்திப்பு, தச்சநல்லூர், டவுன் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தில் அம்பை, மூலக்கரைப்பட்டி, ராதாபுரம், முக்கூடல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டி, அம்பையில் 30 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராதாபுரத்தில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது.

அணைகளை பொறுத்த வரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 16.70 அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 1 அடி உயர்ந்து 17.50 அடியானது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 38.68 அடியாக இருந்த நிலையில் இன்று 1 அடி உயர்ந்து 39.73 அடியானது. இந்த அணைகளுக்கு 179 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் பாபநாசம் அணை பகுதியில் 37 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 44 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறில் 22 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கொடுமுடியாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு பகுதிகளில் மழை பெய்யவில்லை. அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் ஏற்படவில்லை.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகிரியில் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், மணியாச்சி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட இடங்களில் குளிர்ந்த காற்று வீசியது.மாவட்டத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 55.3 மில்லிமீட்டரும், மணியாச்சியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

சாத்தான்குளத்தில் 12 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கோவில்பட்டியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகர பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ந்த காற்றும் வீசியது.

Tags:    

Similar News