உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு தோல்வி பயம்- மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2023-05-13 11:16 IST   |   Update On 2023-05-13 11:16:00 IST
  • நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி தவறான முடிவு எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவளைந்தான் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் காவ்யா தர்ஷனா(வயது19). இவர் கடந்த 2021-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதி 476 மதிப்பெண்கள் பெற்றார். காவ்யா தர்ஷனாவுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பது லட்சியம்.

இதன் காரணமாக பிளஸ்-2 முடித்தபின் நீட் தேர்வுக்கு துரிதமாக தயாரானார். இதற்காக பயிற்சி வகுப்பிற்கும் சென்று வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதிய காவ்யா தர்ஷனாவால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் காவ்யா தர்ஷனா மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. காவ்யா தர்ஷனா நீட் தேர்வு எழுதினார். ஆனால் இந்த முறையும் அவரால் தேர்ச்சி பெற முடியாது என கருதினார். இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த காவ்யா தர்ஷனா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி தவறான முடிவு எடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News