உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று இடைவிடாது கொட்டிய கனமழை

Published On 2023-11-19 13:08 IST   |   Update On 2023-11-19 13:08:00 IST
  • பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
  • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக இருந்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 மாதமாக விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

மார்த்தாண்டம், களியல், குலசேகரம் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையில், மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தன. களியலில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கொட்டாரம், மயிலாடி, தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அதன்பிறகு மழை பெய்தது. சுமார் 2 மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். காலை 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மதியம் 1 மணி வரை நீடித்தது. இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொட்டாரம், சுசீந்திரம், சாமிதோப்பு, கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை பகுதியில் காலை முதலே மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதியிலும் மழை நீடித்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். சிற்றாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மதகுகள் வழியாக மட்டும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக இருந்தது.

அணைக்கு 801 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.81 அடியாக இருந்தது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவே உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 58.4, பெருஞ்சாணி 4.8, சிற்றார் 1-32, சிற்றார் 2-42, களியல் 60, கொட்டாரம் 25, குழித்துறை 9.2, மயிலாடி 4.2, புத்தன அணை 4, தக்கலை 9.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 12, திற்பரப்பு 31.4, அடையாமடை 7.1, முள்ளங்கினா விளை 4.2, ஆணைக்கிடங்கு 13, முக்கடல் 20.

Tags:    

Similar News