நாகை அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி-ரூ.45 ஆயிரம் திருட்டு
- தங்கம், வெள்ளிப் பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்.
- அடகு கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி-ரூ.45 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
நாகப்பட்டினம்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோதிராம். இவர் நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் கடைத்தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். மேலும் இங்கு தங்கம், வெள்ளிப் பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த மோதிராம் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பதறியடித்து கொண்டு பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
கடையின் லாக்கரில் வைத்திருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், கல்லா பெட்டியில் இருந்த ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.35 லட்சம் நகைகள் தப்பியது.
இது குறித்து மோதிராம் வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
அப்போது கொள்ளையர்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க அங்கு பொருத்தபட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களையும் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்று திரும்பி வந்தது. கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.