நாகை அருகே கை, கால்களை கட்டி மாற்றுத்திறனாளி வீட்டோடு எரித்துக்கொலை- காரணம் என்ன? போலீசார் விசாரணை
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி மற்றும் கயிற்றால் ராஜேஷின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.
- நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). மாற்றுத்திறனாளி. இவர் மனைவி செல்வி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் செல்வி வழக்கம்போல் அவரது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, 100 நாள் வேலைக்கு சென்றுன்ளார். வீட்டில் ராஜேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது ராஜேஷின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போராடி தீயை அணைத்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி மற்றும் கயிற்றால் ராஜேஷின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர், நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷின் கை, கால்களை மர்மநபர்கள் கட்டி தீவைத்தனரா? அல்லது வேறு காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி கை, கால்கள் கட்டப்பட்டு வீட்டோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.