உள்ளூர் செய்திகள்

நம்பியூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலி

Published On 2023-08-14 03:59 GMT   |   Update On 2023-08-14 03:59 GMT
  • படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மாதேஸ்வரி (50). இவர்களது ஒரே மகன் சிவானந்தம் (18).

இந்நிலையில் நேற்று காலை மாதேஸ்வரி தனது மகன் சிவானந்தத்துடன் அவிநாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிவானந்தத்துடன் மாதேஸ்வரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சிவானந்தம் மோட்டார் சைக்கிள் ஓட்ட பின்னால் மாதேஸ்வரி அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

நம்பியூர் பவர் ஹவுஸ் மேடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நூற்பாலையில் வேலை செய்யும் தொழிலாளி தீபக் (எ) திம்பா செட்டோம் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தீம்பா செட்டோம் ஓடி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இது குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் படுகாயம் அடைந்த மாதேஸ்வரி மற்றும் சிவானந்தம் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைப்போல் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் தீம்பா செட்டோமை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அதேபோல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீம்பா செட்டோமும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நம்பியூர் போலீசார் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News