உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் ஒன்றியத்தில் கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Published On 2022-09-02 14:51 IST   |   Update On 2022-09-02 14:51:00 IST
  • கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • 55 ஊராட்சிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

பொன்னேரி:

மீஞ்சூர் ஒன்றியத்தில் சுகாதாரத் துறை சார்பில் 40 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு, லார்வாக்களை அழித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ரூ.431 வீதம் கடந்த மூன்று மாதமாக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், ஊதியத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொசு ஒழிப்பு பணி முடங்கி உள்ளது.

இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் ஊராட்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரை கொசு ஒழிப்பு பணியாளர்கள் சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறும் போது, 'குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறோம். மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் குழந்தையின் படிப்பு, குடும்ப செலவுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். கடன் வாங்கி குடும்பம் நடத்தி வருகிறோம்' என்றனர்.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 55 ஊராட்சிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Similar News