உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே லாரி மீது மோதல்- அரசு பஸ் விபத்தில் மேலும் ஒருவர் பலி

Published On 2022-07-10 08:01 GMT   |   Update On 2022-07-10 08:01 GMT
  • திருவள்ளூர் மாவட்டம், காலடிப்பேட்டை அருகே உள்ள சின்ன மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  • இதனால் அரசு பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.

மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் முன்னால் இரும்பு கம்பிகள் ஏற்றிச்சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்மருவத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து நடந்ததும் அரசு பஸ் டிரைவர் முரளி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த திருவள்ளூர் மாவட்டம், காலடிப்பேட்டை அருகே உள்ள சின்ன மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனால் அரசு பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் உத்திரமேரூர் அருகே உள்ள பருத்திகொள்ளை கிராமத்தைச் சோர்ந்த குமார் என்பவருக்கு இடது கை துண்டாகி உள்ளது. அவர் மிகவும் ஆபத்தானநிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே விபத்தில் சிக்கிய அரசு பஸ்சின் டிரைவர் பண்ருட்டி தாலுகா கீழகொள்ளை கிராமத்தை சேர்ந்த முரளி (வயது 44) என்பவர் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை முந்தி செல்லமுயன்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து டிரைவர் முரளியை போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News