அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்போரூரில் கிராமம் கிராமமாக கொடியேற்றி மக்களை சந்திக்கிறார்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுங்கிலும் உள்ள கிராமங்களில் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- இருளர் இன மக்களுக்கு 63 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
திருப்போரூர்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்போரூர் வடக்கு தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூரில் இன்று கிராமம் கிராமமாக சென்று தி.மு.க. கொடியேற்றி மக்களை சந்திக்கிறார். மேலும் 63 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய திருப்போரூர் வடக்கு தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூரில் இன்று (புதன்கிழமை) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கழக கொடியேற்றி மக்களை சந்திக்கிறார்.
திருப்போரூர் தெற்கு ஒன்றியம் மானாம்பதி கிராமத்தில் இன்று கொடியேற்று விழா நிகழ்ச்சியை தொடங்கி கழக கொடியேற்றுகிறார். குயில் குப்பத்தில் கொடியேற்றுகிறார்.
திருப்போரூர் பேரூர் அரசு மருத்துவமனை எதிரில் இருந்து கொடியேற்றி அதை தொடர்ந்து இள்ளலூரிலும், வெண்பேடு கிராமத்திலும், காயாரிலும், காரியார் காலனியிலும், மாலை 5 மணிக்கு பனங்காட்டுப்பாக்கத்திலும், 5.30 மணிக்கு கொளத்தூரிலும், 6 மணிக்கு சோலையூரிலும், 6.30 மணிக்கு கேளம்பாக்கத்திலும், இரவு 7 மணிக்கு தையூரிலும் கொடியேற்றி வைக்கிறார்.
மொத்தம் 13 இடங்களில் கிராமம் கிராமமாக சென்று கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுங்கிலும் உள்ள கிராமங்களில் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக கிராமம் கிராமமாக சென்று கொடியேற்று விழாவில் பங்கேற்க வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூரில் உள்ள ஒட்டு மொத்த கழக நிர்வாகிகளும் வழிநெடுக கழக கொடி தோரணங்களை அழகுற கட்டி வரவேற்பு பதாகைகளையும் கழக கொடிகளையும் தங்களது கரங்களில் ஏந்தி நின்று எழுச்சியான முறையில் வரவேற்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.
முன்னதாக இருளர் இன மக்களுக்கு 63 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.