உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் கடல்சார் முன்கள ஆய்வு பணி- அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

Published On 2022-09-03 14:57 IST   |   Update On 2022-09-03 14:57:00 IST
  • கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது.
  • ஆய்வு பணியை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:

சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாக கொற்கை போற்றப்படுகிறது.

சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் சங்கமருவியக் காலத்தைச் சார்ந்த காவியமான சிலப்பதிகாரமும் கொற்கையைப் பற்றி விவரிக்கின்றன.

பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச்சிறந்த துறைமுகமாக செயல்பட்டிருந்தது. மேலை நாட்டுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணிகம் நடைபெற்றுள்ளது.

அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வில் கங்கை சமவெளியை சார்ந்த கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வடஇந்திய கருப்பு வண்ணமெருகேற்றப்பட்ட பானைஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவை தமிழ்நாடானது இந்தியாவின் பிறபகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற்றுள்ளதைக் எடுத்துக்காட்டுகிறது.

ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் பெறப்பட்ட கரிமப்பகுப்பாய்வுக் காலக்கணிப்பின்படி கி.மு.8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிக முக்கியத் துறைமுகமாக செயல்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிப்பதற்காக கடல் சார் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது. அதனை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல் பகுதியில் நடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி வரை இந்த ஆய்வில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், தொல்லியல் அலுவலர்களும் ஈடுபடுகின்றனர்.

ஆய்வின் முடிவில் கொற்கையில் புதைந்துள்ள மிகப்பெரிய துறைமுகமும், அதை சார்ந்த வரலாற்றுத்தகவல்களும் விரைவில் வெளிவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News