உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Published On 2022-08-14 07:50 GMT   |   Update On 2022-08-14 08:38 GMT
  • கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான நன்மை என்பதுடன், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உடல்நிலை சார்ந்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது.
  • மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளும் முதல்-அமைச்சரின் சீரிய பணியில் ஒருங்கிணைந்து நிற்கின்றன. வெற்று ஊளையிடும் பழனிசாமியின் அரசியல் நரித்தனம் ஒருபோதும் எடுபடாது.

சென்னை:

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அலங்கோலமான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின் சாட்சிகளில் ஒன்றாக நிலைத்து இருப்பதுதான் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் அபரிமிதமான வளர்ச்சி. அதனை உணர மறுத்து தினசரி "நானும் இருக்கிறேன், நானும் இருக்கிறேன்" என்று காட்டிக்கொள்ள ஏற்கனவே தெளிவாக எடுத்துரைத்த விளக்கத்திற்கு மீண்டும், மீண்டும் வினா தொடுத்து வருகிறார்.

உலகளவிலான ஒலிம்பிக் போட்டிக்கு இணையான சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தாங்கிக் கொள்ள இயலாமல், அரசு மீது ஏதாவது ஒரு வகையில் புழுதிவாரி தூற்ற வேண்டுமென்ற தீய எண்ணத்தில் போதைப் பொருட்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.

பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றியதால் தாங்கொண்ணா துயரத்தில் இருந்து வரும் பழனிசாமி, அரசின் மீது சேற்றை வாரி இறைக்கிறார் என்பதில் ஆச்சர்யமில்லை.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான மாவா, குட்கா, ஹன்ஸ் போன்ற பொருட்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்பவர்கள், கடைகளில் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோரைக் கண்காணித்து திடீர் சோதனைகள் நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெரும்பொருட்டு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 14 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பார்த்தாலே மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு புரியும்.

அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக சரிவர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தங்களது கடமைகளிலிருந்து தவறியதின் காரணமாக போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்து விட்டது. தற்போது இவ்வரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது. இப்போதைப் பொருட்களின் புழக்கம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கட்டவிழ்த்து விடப்பட்டதால் அதனுடைய பாதிப்பு தற்போதும் தொடர்கிறது. இதற்கு முந்தைய அரசின் சரியான திட்டமிடாத தன்மையும், அவற்றை முறையாக அமல்படுத்தாததுமே காரணங்களாகும். சமூகத்தில் புரையோடிப் போய்விட்ட இப்போதை பழக்கத்தினை அடியோடு ஒழிக்க இவ்வரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகள் உண்மை நிலையை பிரதிபலிக்கின்றன.

அ.தி.மு.க. அரசின் அமைச்சரவையில் போதைப் பொருளின் பெயரை பட்டமாக கொண்ட குட்கா பாஸ்கர் மீது ஒன்றிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்ட போதிலும், தொடர்ந்து அமைச்சரவையில் "பங்கு" பெற வைத்து சாதனை புரிந்தவர் பழனிசாமி என்பதையும் அவருக்கு யாராவது நினைவூட்டலாம்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான நன்மை என்பதுடன், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உடல்நிலை சார்ந்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளும் இதில் முதல்-அமைச்சரின் சீரிய பணியில் ஒருங்கிணைந்து நிற்கின்றன. வெற்று ஊளையிடும் பழனிசாமியின் அரசியல் நரித்தனம் ஒருபோதும் எடுபடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News