உள்ளூர் செய்திகள்

அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

Published On 2023-01-16 03:52 GMT   |   Update On 2023-01-16 03:52 GMT
  • அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை.
  • சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

சேலம் :

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநகராட்சியில் குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தரப்படுகிறது. மக்காத குப்பைகள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் வகையில் மாற்றப்படும். சேலம் மாநகராட்சிக்கு தேவையான குப்பை எடுக்கும் வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தூர், சத்தீஸ்கார் ஆகிய இடங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர்களை அழைத்து சென்று அங்கு பின்பற்றப்படும் தூய்மை நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அடுத்த ஓராண்டில் சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

சேலத்தில் அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு எதுவும் இல்லை. அங்கு கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தியதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை. இதனால் சுழற்சி முறையில் அம்மா உணவகங்களில் பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி உள்ளது. தேவையான நிதியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Tags:    

Similar News