உள்ளூர் செய்திகள்

வெள்ளிங்கிரி மலையேறி 50 ஆயிரம் பேர் தரிசனம்

Published On 2024-03-11 12:51 IST   |   Update On 2024-03-11 12:51:00 IST
  • கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவர்.
  • பூண்டி மலைஅடி வாரத்திலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வடவள்ளி:

கோவை மாவட்டம் பூண்டி அருகே பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்து உள்ளது. அடுத்தடுத்த 6 மலைத்தொடர்களை கடந்து சென்றால் தான், 7-வது மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சுயம்பு வடிவ சிவபெருமானை தரிசிக்க முடியும்.

வெள்ளிங்கிரி மலைக்கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்ய வனத்துறையினர் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அனுமதி வழங்குவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி கிரிவலம் சென்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவர்.

இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மூங்கில் தடிகளின் உதவியுடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளிங்கிரி மலையேறி சென்று உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

அதிலும் குறிப்பாக மாசி மாத அமாவாசையை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலை உச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது மலர் அலங்காரத்துடன் காட்சியளித்த வெள்ளிங்கிரி ஆண்டவரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பூண்டி மலைஅடி வாரத்திலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கிடையே கோவை வீரபாண்டி லட்சுமி நகரை சேர்ந்த கிரண் (வயது 22) என்பவர் நண்பர்கள் சிலருடன் வந்து மலையேறினார். அப்போது 5-வது மலை ஓட்டன் சமாதி அருகே சென்றபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த கிரணை மீட்டு அடிவாரம் கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிரண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News