மதுராந்தகத்தில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை
- போலீஸ் நிலையம் வந்து நகையை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு மர்மநபர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம், கடப்பேரி பகுதியில் உள்ள மண்டபத் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம். இவரது மனைவி பிரமலா (வயது60). இவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது டிப்-டாப் உடை அணிந்த 2 வாலிபர்கள் பிரமலாவிடம் பேச்சு கொடுத்தனர். நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள். பல இடங்களில் திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் ஒரு பெண்ணிடம் திருடுபோன நகை உங்கள் கழுத்தில் இருக்கின்ற நகை போல் உள்ளது. அதனை பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மூதாட்டி பிரமலா தான் அணிந்து இருந்த 7½ நகையை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்தார். பின்னர் நகையை பார்த்த மர்மநபர்கள் பிரமலாவிடம் வீட்டு முகவரியை கேட்டு குறித்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் வந்து நகையை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு மர்மநபர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பிரமலா தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் விசாரித்த போது மர்ம நபர்கள் போலீஸ்போல் நடித்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் பிரமலா கணவர் பக்த வச்சலம் கொடுத்த புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.