மதுரை ரெயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தை கடத்தல்- பெண் உள்பட 2 பேர் கைது
- தனிப்படை போலீசார் ரெயில் நிலைய சாலை பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
- குழந்தையை விற்பதற்காக கடத்தல் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் கரட்டூரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (வயது25).இவர்களுக்கு ஷாலினி என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் நேற்று குழந்தையுடன் மதுரைக்கு ரெயில் மூலம் வந்தனர். அப்போது நள்ளிரவு என்பதால் குழந்தையுடன் 2 பேரும் ரெயில் நிலைய முகப்பு பகுதியில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 2 மணி அளவில் செய்யது அலி பாத்திமா கண் விழித்தபோது அவரது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவருடன் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து செய்யது அலி பாத்திமா மதுரை திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். குழந்தை மாயமானது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் உத்தர விட்டார். அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத், உதவி கமிஷனர் மகேஷ் தலைமையில் திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ரெயில் நிலைய சாலை பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் செய்யது அலி பாத்திமா அருகில் படுத்திருந்த குழந்தையை மர்ம நபர் ஆட்டோவில் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் குறிப்பிட்ட ஆட்டோ காளவாசல் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடம் சென்று அங்கு குழந்தையுடன் பதுங்கி இருந்த மேலூர் வெள்ளலூரை சேர்ந்த போஸ் (35) என்பவரை கைது செய்து குழந்தை ஷாலினியை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சேர்ந்த புருசோத்தமன் மனைவி கலை வாணி (33) தூண்டுதலின் பேரில் குழந்தையை கடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
குழந்தையை விற்பதற்காக கடத்தல் சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.