உள்ளூர் செய்திகள்

விபத்தில் இறந்த மாரிமுத்து

திருவாடானை அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து- ஏற்றுமதி நிறுவன ஊழியர் பலி

Published On 2023-03-15 11:30 IST   |   Update On 2023-03-15 11:30:00 IST
  • கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
  • விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருவாடானை:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் மீன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு பதப்படுத்தப்பட்ட இறால், கனவாய் உள்ளிட்ட ஏராளமான மீன்கள் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

லாரியை அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டினார். அவருடன் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் மாரிமுத்து (வயது 51) உடன் சென்றார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி-ராமேசுவரம் சாலையில் சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது.

கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையை விட்டு இறங்கிய லாரி 30 அடி தூரத்தில் உள்ள குப்புசாமி என்பவர் வீட்டின் மீது பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் ஜெயபிரகாஷ் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி மோதிய வேகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.

இந்த விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News