உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே கண்டெய்னர், டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 2 பேர் பலி

Published On 2022-09-16 08:04 GMT   |   Update On 2022-09-16 08:04 GMT
  • போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
  • இறந்தவர்களின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

சேலம்:

சேலத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி அரூர் நோக்கி நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது அரூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிப்பர் லாரியில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூரை சேர்ந்த இளங்கோ (வயது45), தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி தாலுகா ஈச்சம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த பழனி (வயது 40) ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி உயிருக்கு போராடினர்.

பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை உடல்களை மீட்க முயன்றனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடி மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து உதவி கமிஷனர் சரவணகுமார், வீராணம் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டெய்னர் லாரி டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதற்கிடையே இறந்தவர்களின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News