உள்ளூர் செய்திகள்

ஊருக்குள் புகுந்த சிறுத்தை


தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-08-04 10:19 IST   |   Update On 2023-08-04 10:19:00 IST
  • கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி உள்ள சிறுத்தை எந்நேரமும் மீண்டும் ஊருக்குள் வரலாம் என்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
  • சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சர ங்கங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெ ருமை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

உணவு, தண்ணீர் தேடி யானைகள் அவ்வபோது விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதாரம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் ஜூர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்தில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 41).விவசாயியான இவர் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன்பு சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட் முன்பு சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே முருகன் வீட்டின் கதவை மூடிவிட்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விட்டார். பின்பு அங்கு சிறுத்தை நின்று கொண்டிருப்பதை தனது செல்போனில் படம் எடுத்தார்.

பின்னர் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த சிறுத்தை அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் சென்று பதுங்கியது. மேலும் கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி உள்ள சிறுத்தை எந்நேரமும் மீண்டும் ஊருக்குள் வரலாம் என்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News