உள்ளூர் செய்திகள்

வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை- பொதுமக்கள் பீதி

Published On 2024-01-23 10:19 GMT   |   Update On 2024-01-23 10:19 GMT
  • குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.
  • சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அது திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற பூனையை துரத்தி சென்றது. ஆனால் பூனை தப்பிவிட்டது. தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

ஏற்கனவே இந்த பகுதிக்கு 3 முறை சிறுத்தை வந்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. எனவே எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News