சிங்கம்புணரியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்த தொழிலாளி பலி
- மேலூர் அருகே உள்ள மேலநாட்டார் மங்கலத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் ரகு,
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிங்கம்புணரி:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலநாட்டார் மங்கலத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் ரகு (வயது 33). சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதன் காரணமாக துக்கத்தில் இருந்த ரகு அடிக்கடி மது குடித்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த ரகு நேற்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு சென்றார். அங்குள்ள பெரியார் கால்வாய் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் இரவு ரகு மது அருந்தினார்.
போதை தலைக்கேறிய நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பெரியார் கால்வாய் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த கால்வாயில் விழுந்தது. இதில் ரகு கால்வாயில் மூழ்கினார். இரவு நேரம் என்பதால் அவர் கால்வாயில் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. போதையில் இருந்த காரணத்தால் அவரால் சுதாரித்துக் கொள்ள முடிய வில்லை. இதன் காரணமாக தண்ணீரில் மூழ்கி ரகு மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.