நாகர்கோவிலில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்
- மனைவியை கொலை செய்து விட்டு கணவர் நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 29).
இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வேலைக்காக வந்தார். கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் முகமது உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெஜினா பானு இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும் மறுநாள் காலையில் அவர் நீண்ட நேரமாக எழும்பாததால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முகமது உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் ரெஜினா பானுவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்பொழுது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்று விட்டு வந்த போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன்.
தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையில் எனது மனைவியின் கழுத்தை நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் போட்டுவிட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர்.
அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினேன். பின்னர் ரெஜினாபானுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் துருவி துருவி விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.