உள்ளூர் செய்திகள் (District)

நீலகிரியில் கனமழை: தண்டவாளத்தில் மண்சரிவு- மலைரெயில் ரத்து

Published On 2023-11-04 05:16 GMT   |   Update On 2023-11-04 05:22 GMT
  • கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
  • மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரெயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரெயில்நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் இந்த மலைரெயில் பெரிதும் கவர்ந்து வருகிறது.

இம்மலை ரெயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் பலத்த மழை பெய்தது.

இந்த மழைக்கு கல்லார் ரெயில் நிலையம் முதல் அடர்லி ரெயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனது. மேலும் மரங்களும் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

இதனால் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.மேலும் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு நாளை வழக்கம் போல் மலைரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News