கோபிசெட்டிபாளையம் அருகே பலத்த மழை: 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் பரபரப்பு
- மழை நீர் வீடுகளுக்குள் 2 அடி உயரத்திற்கு புகுந்ததால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
- வீடுகளில் மழை நீர் புகுந்ததால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கத்தை தொலைத்து பெரும் அவதி அடைந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவும் பலத்த மழை பெய்ததால் விவசாய நிலங்கள் வழியாக முழுமையாக மழை நீர் வெளியேற வழியில்லாத நிலையில் தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.
மழை நீர் வீடுகளுக்குள் 2 அடி உயரத்திற்கு புகுந்ததால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே மழைநீர் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூகலூர் பேரூராட்சி தலைவர் ஜெயலட்சுமி, கோபி தாசில்தார் உத்தரசாமி மற்றும் வருவாய்த்துறையினர், கோபி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த இரும்பு கதவு வழியாக வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.
மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது குறித்து வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், பல ஆண்டு காலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தை சென்றடைந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர் தடுப்பு சுவர் அமைத்ததால் மழை நீர் வெளியேற வழியில்லாத நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்தும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது தெரியவந்தது.
வீடுகளில் மழை நீர் புகுந்ததால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கத்தை தொலைத்து பெரும் அவதி அடைந்தனர். இன்னும் சிலர் வீடுகளில் புகுந்த நீரை குடம், வாலிகளை கொண்டு இறைத்து வெளியேற்றினர்.