உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-05 13:48 IST   |   Update On 2023-11-05 13:48:00 IST
  • தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் ஆங்காங்கே ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • சத்தியமங்கலம் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலையால் பசுமை நிறைந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காணப்படுகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு 10.30 மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெ ட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் சேரும் சகதியுமாக காட்சியளித்ததால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் சாலையில் குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக எலந்த குட்டைமேடு பகுதியில் 88 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

பவானி, மொடக்குறிச்சி, குண்டேரி பள்ளம், நம்பியூர், கொடிவேரி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலத்தில் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதேபோல் பவானியிலும் பரவலாக மழை பெய்தால் 3 மணி நேரம் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. பெருந்துறை, அம்மாபேட்டை, தாளவாடி, சென்னிமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது.

தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் ஆங்காங்கே ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலையால் பசுமை நிறைந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காணப்படுகிறது.

இதேபோல் மாவட்டத்தில் முக்கிய அணைப்பகுதியான வரட்டுப்பள்ளம், கொடிவேரி, பவானிசாகர், பெரும்பள்ளம் போன்ற பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இரவு பெய்த கனமழையின் காரணமாக நம்பியூர்-அரசூர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் தட்டாம்புதூரில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தற்காலிக தரைப்பாலம் அமைத்துள்ளனர். அதிகப்படியான நீர் தரைபாலத்திற்கு மேலே சென்று கொண்டிருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நம்பியூரில் இருந்து சத்தி செல்லும் பஸ்கள் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு சுண்டக்காம்பாளையம் வழியாக 5 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் சிங்கிரிபாளையம் செல்லும் ரோட்டில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோபி அடுத்த கீரிப்பிள்ளை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடையில் இருபுறமும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

எலந்தகுட்டைமேடு-88, பவானி-72, மொடக்குறிச்சி-70, குண்டேரிப்பள்ளம்-68.80, நம்பியூர்-61, கொடிவேரி-56, வரட்டுப்பள்ளம்-55.20, சத்தியமங்கலம்-53, பெருந்துறை-49, பவானிசாகர்-47.40, ஈரோடு-44, கொடுமுடி-40, அம்மாபேட்டை-36.20, கவுந்தப்பாடி-34, தாளவாடி-24.40, சென்னிமலை-12. மாவட்டம் முழுவதும் 872 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News