செங்கல்பட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
- மழையால் செங்கல்பட்டில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- மரம் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.
செங்கல்பட்டு:
கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வெயிலின் வெப்பத்தில் இருந்தும், அனல் காற்றில் இருந்தும் மக்களை காப்பாற்றும் வகையில் செங்கல்பட்டில் நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று மாலை 6 மணியளவில் செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
சுமார் 45நிமிடம் கனமழை பெய்தது. இந்த மழையால் செங்கல்பட்டில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால அந்த பகுதி மக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை அசோக் நகர், 7 -வது அவென்யூ பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் காற்றின் வேகம் காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வேரோடு சரிந்து சாலையில் விழுந்தது. சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்தபடி மரம் விழுந்ததால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
தகவலறிந்து அசோக் நகர் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து போலீசாரும் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மரம் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர் சேம் தவிர்க்கப்பட்டது.