உள்ளூர் செய்திகள்

3 பேர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2024-02-22 09:51 GMT   |   Update On 2024-02-22 09:51 GMT
  • வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.
  • வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்காக பசும்பொன் சென்றவர்கள், அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

அப்போது பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் என்ற கிராமத்தில் உள்ளே சென்ற வேனை, சிலர் வழி மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் வேன் டிரைவர் சிவக்குமார், வீரமணி மற்றும் மலைகண்ணன் ஆகிய 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பலர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டனர். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் சாட்சிகள் கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்வதில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த வழக்கில் பல அரசு தரப்பு சாட்சிகள் சாட்சிகளை ஒழுங்காக பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் கூட குற்றவாளிகளுக்கு பயந்து பிறழ் சாட்சியாக மாறி விட்டனர்.

எனவே இந்த வழக்குகளின் விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் இருந்து வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை பாதுகாப்பது அரசின் கடமை. மேலும் இந்த வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.

எனவே இந்த கொலை வழக்குகளின் விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News