உள்ளூர் செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்-மனைவி பலி

Published On 2022-07-05 14:13 IST   |   Update On 2022-07-05 14:13:00 IST
  • திருவண்ணாமலை மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை கொத்தனார்.
  • கணவன்-மனைவி இருவரும் மேடவாக்கம் அடுத்த வேங்கை வாசலில் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

கூடுவாஞ்சேரி:

திருவண்ணாமலை மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை(வயது45). கொத்தனார். இவரது மனைவி காமாட்சி(35). இவர்கள் குடும்பத்துடன் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம், விநாயக புரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் மேடவாக்கம் அடுத்த வேங்கை வாசலில் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

கண்டிகை கீரப்பாக்கம் செல்லும் சாலை வந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த காமாட்சி மீது லாரி ஏறி இறங்கியது. அவரது கணவர் சின்னத்துரை படுகாயம்அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொது மக்கள் உயிருக்குபோராடிய 2 பேரையும் மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக இறந்தார். சின்னத்துரைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பொது மக்கள் விரட்டிச்சென்று மேட்டுப்பாளையம் கிராமத்தில் மடக்கிப் பிடித்தனர். மேலும் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக மேலக்கோட்டையூரை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News