உள்ளூர் செய்திகள்

வேலம்மாள் பாட்டிக்கு அரசின் இலவச வீடு- ஆர்.டி.ஓ. நேரில் வழங்கினார்

Published On 2022-08-23 07:29 GMT   |   Update On 2022-08-23 07:29 GMT
  • அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்கு ரூ.76 ஆயிரத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க வேண்டும்.
  • வேலம்மாள் பாட்டிக்காக அந்த தொகையை தோவாளை ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பூதலிங்கம் செலுத்தி உள்ளார்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலை சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. இவர் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை கையில் வைத்துக் கொண்டு பொக்கை வாய் சிரிப்புடன் இருந்த படம் மூலம் பிரபலமானார்.

இந்தப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிரிப்பு என கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி நாகர்கோவில் வந்த அவர், வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார்.

அப்போது தனக்கு இலவச வீடும், முதியோர் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என வேலம்மாள் பாட்டி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வேலம்மாள் பாட்டிக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வீடு கோரிக்கை நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அஞ்சுகிராமம் பால்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு ஒதுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் நேற்று இரவு வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீட்டிற்கான உத்தரவை வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட வேலம்மாள் பாட்டி, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எனக்கு இலவச வீடு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி. ஏழைகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன் என்றார்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்கு ரூ.76 ஆயிரத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க வேண்டும். வேலம்மாள் பாட்டிக்காக அந்த தொகையை தோவாளை ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பூதலிங்கம் செலுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது.

இலவச வீடு பெற்ற வேலம்மாள் பாட்டியை, நாகர்கோவில் மேயர் மகேஷ் இன்று நேரில் அழைத்து கவுரவித்தார்.

Tags:    

Similar News