உள்ளூர் செய்திகள்

ஆதிலட்சுமி

தந்தை இறந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி- ஆசிரியர்கள், மாணவிகள் நெகிழ்ச்சி

Published On 2023-04-13 09:40 GMT   |   Update On 2023-04-13 09:40 GMT
  • கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்கிற மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.
  • ஆதிலட்சுமியின் தந்தை ரவி காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

கடலூர்:

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் 445 பள்ளிகளை சேர்ந்த 34 ஆயிரத்து 794 மாணவர்கள் 149 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்கிற மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இவரது தந்தை ரவி காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ரவிக்கு உடல்நிலை பாதிக்கப்படடு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அறிந்த மாணவி ஆதிலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர். இன்று 10-ம் வகுப்பு கணித பாடத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆதிலட்சுமி காலையில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார்.

இத்தகவல் அறிந்த ஆதிலட்சுமியின் தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து கண்கலங்கிய படி மாணவி ஆதிலட்சுமி தேர்வெழுதினார். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News