நாமக்கல்லில் நள்ளிரவில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
- அய்யனார் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
நாமக்கல்:
மதுரை மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த பேரையூர் பகுதியை சேர்ந்தவர் முக்கராஜ். இவரது மகன் அய்யனார் (வயது 29). கூலி தொழிலாளி.
இவர் நாமக்கல் ராமாவரம்புதூர் பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள மது பாரில் வேலை பார்த்து வந்தார்.
வழக்கம்போல் நேற்று இரவு மதுபாரில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அதே பகுதியில் தான் தங்கி உள்ள அறைக்கு சென்றார். அப்போது மது போதையில் 2-வது மாடியில் தடுப்பு சுவரை பிடித்து நின்றவாறு செல்போனில் அய்யனார் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தடுப்பு சுவர் திடீரென இடிந்தது. இதனால் அய்யனார் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.