கடன் வாங்கி தருவதாக கூறி 10 பேருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து நூதன மோசடி- வாலிபர் கைது
- நூதனமுறையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.
- செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(34). டிப்ளமோ படித்து உள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், வண்டலூர் அடுத்துள்ள நெடுகுன்றம் பகுதியை சேர்ந்தவர்களிடம் தனிநபர் கடன் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோரிடம் வங்கியில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை வாங்கினார்.
பின்னர் கார்த்திக், அவர்களிடம் கடன் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே செல்போன் கடையில் இ.எம்.ஐ.யில் ஐபோன் வாங்கி விட்டு அதனை விற்று உடனடியாக பணம் தருவதாக தெரிவித்தார். இதனை நம்பிய 10 பேரையும் கூடுவாஞ்சேரியில் உள்ள பிரபல தனியார் செல்போன் விற்பனை கடைக்கு அழைத்து சென்று ரூ.58 ஆயிரம் மதிப்பில் 10 ஐபோன்கள் வாங்கினார். பின்னர் மாதாமாதம் பணம் கட்டுவதாக கூறி கடன் வாங்க கொடுத்தவர்களின் வங்கிகணக்கு உள்ளிட்ட ஆவணங்களை கடையில் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து 10 ஐபோன்களையும் நல்ல விலைக்கு விற்று உடனடியாக பணம் தருவதாக கூறி செல்போனுடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. கூறியபடி பணத்தையும் கொடுக்கவில்லை.
இதற்கிடையே செல்போன் கடைக்கு கட்ட வேண்டிய இ.எம்.ஐ. கடன் தொகை பற்றி ஆவணங்கள் கொடுத்த 10 பேருக்கும் வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. இதனால் நூதனமுறையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.