உள்ளூர் செய்திகள்

திருச்சி கல்லூரி மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்: விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை-அத்தை கைது

Published On 2022-12-16 08:02 GMT   |   Update On 2022-12-16 08:02 GMT
  • மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5-ந்தேதி பிறந்து சில மணி நேரங்களான ஒரு அழகான ஆண் சிசு வீசப்பட்டு அழுது கொண்டிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை பெற்றெடுத்தவர் ஜீயபுரம் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி (வயது 19) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவியான அவர் திருமணம் ஆகாத நிலையில் காதலன் மூலமாக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுள்ளார்.

பின்னர் சமூகத்தில் அசிங்கமாகி விடும் என நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை அவர் முதலில் வீசியது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்த நிலையில், குழந்தை பெற்ற அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தகவல் வெளியானது.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கலைவாணி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சிகிச்சையில் இருக்கும் போது கலைவாணி திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது பெற்றோர் வாயில் விஷம் ஊற்றியதாக கூறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து போலீசார் திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில், மாஜிஸ்ட்ரேட்டுவிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தை பெற்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கலைவாணியின் தாயார் தோட்டத்துக்கு சென்ற நிலையில் மாணவியின் தந்தை செல்வமணி, அவரது சகோதரி மல்லிகா (கலைவாணியின் அத்தை) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை கலைவாணியிடம் கொடுத்து குடிக்க வலியுறுத்தியதாக எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்விடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த அடிப்படையில் மர்மச்சாவு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேற்கண்ட 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News