திருச்சி அருகே ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
- மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- போராட்டத்தில் சுமார் 50 மேற்பட்டோர் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
மண்ணச்சநல்லூர்:
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று டெல்டா மாவட்டங்களை கடைகளை அடைத்து மறியல் போராட்டம் நடந்தது.
திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூரா.விசுவநாதன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் சுமார் 50 மேற்பட்டோர் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
தமிழகத்திற்கு குறுவைக்கும், சம்பா சாகுபடிக்கும் கர்நாடகாவிடமிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத் தராத பா.ஜ.க. அரசை கண்டித்தும், அணையில் தண்ணீர் இல்லை என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும் கபட நாடகமாடும் கர்நாடக முதல்-மந்திரி சீத்தாராமையாவை கண்டித்தும், தமிழகத்திற்கு உண்டா காவிரி நீரை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படியும், காவிரி மேலாண்மை ஆணையை காவிரி நீர் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.