உள்ளூர் செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீண்டும் தற்கொலை முயற்சி

Published On 2023-09-14 09:07 GMT   |   Update On 2023-09-14 09:07 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர்.
  • அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் எண்ணூர் தனசேகரன் தெரிவித்தார்.

கடலூர்:

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறை சாலை உள்ளது. இந்த சிறைசாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைசாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 7-ந்தேதி தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று எண்ணூர் தனசேகரன் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உண்மையிலேயே அதிக மாத்திரைகளை தின்றாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News