உள்ளூர் செய்திகள்

தனியார் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு

Published On 2023-07-29 06:36 GMT   |   Update On 2023-07-29 06:36 GMT
  • பட்டாசு குடோனில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர்.
  • வெடி விபத்தால் குடோன் அருகே இருந்த ஒரு ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோன் வெடித்தது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதால் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி பழையப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் உள்ள காட்டிநாயனப்பள்ளி சாலையில் பட்டாசு குடோன் அமைத்து பட்டாசுகளை மொத்த விற்பனை செய்து வருகிறார்.

அந்த பட்டாசு குடோனில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த பட்டாசு குடோனுக்கு வழக்கம்போல் தொழிலாளிகள் வேலைக்கு வந்தனர். அப்போது திடீரென்று பயங்கர வெடித்து சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதில் குடோனில் பணிபுரிந்த 4 தொழிலாளிகள் தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.

வெடிவிபத்தில் சிக்கிய மீதமுள்ள 6 தொழிலாளிகள் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த வெடி விபத்தால் குடோன் அருகே இருந்த ஒரு ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் 10 பேருக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு குடோன் அருகே இருந்த ஓட்டல் இடிந்து விழுந்ததால், அதில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டுள்ளனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வெடி விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது வரும் வழியிலேயே மேலும் 4 பேர் உயிரிழந்தார். காயமடைந்த 6 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெடிவிபத்து குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன், மாவட்ட கலெக்டர் சரயு, மற்றும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News