ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லையில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.91 லட்சம் பறிமுதல்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
- பறிமுதல் செய்யப்பட்ட தொகை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வட மாநில வியாபாரியிடம் ரூ.1.17 லட்சம், நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1.37 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரளா ஜவுளி வியாபாரியிடம் ரூ.3 லட்சம், ஆந்திரா வியாபாரிடம் ரூ.1 லட்சத்து 200 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்காக, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையில் சோதனை சாவடி அமைத்து, தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரசாத் என்பவரின் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ரூ.1 லட்சத்து 3,800 ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர் சூரம்பட்டியில் உள்ள சோப் நிறுவனத்துக்கு சோடா பவுடர் வாங்க பணத்துடன் வந்ததாக தெரிவித்தார். இருப்பினும் அத்தொகைக்கு உரிய ஆவணம் இல்லாததால், பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் நசியனுார் கன்னவேலம்பா ளையத்தை சேர்ந்த மீன் குத்தகைதாரர் நல்லசிவம் (44) காஞ்சிகோவில் அருகே செல்லப்ப கவுண்டன்வலசை சேர்ந்த கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர் பூபதி (27) ஆகியோர் காரில் வந்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது ரூ.87,500 ரொக்க பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோட்டில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அப்பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.