ஈரோடு பஸ் நிலையம் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.74 லட்சம் பணம் பறிமுதல்
- காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பது தெரிய வந்தது.
- பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.1.74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11.20 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையம் அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.
அந்த காரை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்திய போது ரூ.1.74 லட்சம் பணம் இருந்தது.
இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குமரவேல் (39) என்பது தெரிய வந்தது. மேலும் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.1.74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அவரிடம் அறிவுறுத்தி உள்ளனர்.