எண்ணூரில் ரவுடி வெட்டிக்கொலை- 4 பேர் கைது
- எண்ணூர் வ.உ.சி. நகர், 7- வது தெருவை சேர்ந்தவர் ஜாகிர் என்கிற ஜாகீர் உசேன் பிரபல ரவுடி.
- கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
எண்ணூர், வ.உ.சி. நகர், 7- வது தெருவை சேர்ந்தவர் ஜாகிர் என்கிற ஜாகீர் உசேன் (வயது 32). பிரபல ரவுடி.
இவர் மீது பல்வேறு வழக்குகள் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. தற்போது ஜாகிர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஜாகிர் உசேன் அதே பகுதி காமராஜர் நகர், 7-வது தெருவில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது 6 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜாகீர் உசேன் ஓட்டம் பிடித்தார்.
ஆனாலும் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம், கை கால்களில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த ஜாகீர் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலைகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொலைகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜாகிர் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக கார்த்திக் என்ற அட்டு கார்த்திக், அருண்குமார், ரமேஷ்குமார், கிஷோர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் முக்கிய குற்றவாளியான பாம் ராஜேஷ்,நிஜாமுதின் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் சிக்கினால் தான் முன்விேராதத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரிய வரும். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.