உள்ளூர் செய்திகள்

கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தல்: வேப்பனபள்ளி எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

Published On 2024-04-24 09:32 GMT   |   Update On 2024-04-24 09:32 GMT
  • தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.
  • உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி மூன்று மாநில எல்லைப்பகுதியான வேப்பனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி, பாராளுமன்ற தேர்தல் முடிந்தது. கர்நாடகத்தில் நாளை மறுநாள், மே 7 என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதேபோல ஆந்திராவில் சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் மே 13-ல், நடக்கிறது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.

எனவே வேப்பனபள்ளி அருகில், கர்நாடக மாநில எல்லையில் உள்ள நேரலகிரி சோதனைசாவடி, அத்திகுண்டா சோதனை சாவடி, வேப்பனபள்ளிஅடுத்த ஆந்திர மாநில எல்லையிலுள்ள ஒ.என்.கொத்தூர் சோதனைசாவடி உள்ளிட்டவற்றில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எத்தனை முறை சோதனையிடுவீர்கள் என சலித்து கொண்டவாறு செல்கின்றனர்.

Tags:    

Similar News