நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை விரைவில் உயரும்- ஒருங்கிணைப்பு குழு தகவல்
- நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது.
- கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கிறது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் முட்டை விலை உயர்ந்து வருகிறது. நாளையும் விலை உயர இருப்பதாக தெரிகிறது. பர்வாலா மார்கெட்டிலும் முட்டை விற்பனை நன்றாக உள்ளதால் அங்கும் விலை ஏற உள்ளதாக தெரிகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 15 நாட்களாக மைனஸ் நிலையாக இருப்பதற்கு பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பே காரணம். இதைப் போலவே வரும் காலங்களிலும் நிலையான மைனஸ் விலை அல்லது அறிவிக்கப்படும் முட்டை விற்பனை விலை தொடர பண்ணையாளர்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரத்தை அனு சரித்து நாமக்கல்லிலும் வரும் நாட்களில் விலை ஏறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனவே முட்டை விலை ஏறும் வாய்ப்புள்ளதால் பண்ணையாளர்கள் 30 பைசா மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டாம். வியாபாரிகளும் 30 பைசா மைனசுக்கு மேல் கேட்க வேண்டாம்.
இன்று ஒரு சில இடங்களில் 35-40 பைசா கேட்பதாக தகவல்கள் வருகின்றன. மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரம் தெரியாமல் சில வியாபாரிகள் பண்ணையாளர்களுக்கு நெருக்கடிகள் கொடுப்பதாக அறிகிறோம். அவ்வாறு யாராவது அதிக மைனஸ் கேட்டால் அந்தந்த வட்டார குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும்.
சில வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் அதிக மைனசிற்கு கேட்பதை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் விதமாக,நாளை முதல் மீண்டும் தேசியமுட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளோடு இணைந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம், நாமக்கல் எக்புரோடியூசர்ஸ் அசோசியேசன், ராசிபுரம்முட்டை கோழி பண்ணையாளர்கள் சொசைட்டி மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து முட்டை எடுத்துச் சொல்லும் வியாபாரிகளின் வண்டிகளை ஆய்வு செய்ய உள்ளார்கள்.
நாமக்கல்லில் முட்டை இருப்பே இல்லாத சூழ்நிலையிலும் அதிக மைனஸ் கேட்கும் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் நோக்கில்மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கிலும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எடுக்கும் முடிவுகளுக்கு கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.